காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

குள்ளம்பாளையம் கரித்தொட்டி ஆலையைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள கரித்தொட்டி ஆலையைக் கண்டித்து பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்
Published on

பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள கரித்தொட்டி ஆலையைக் கண்டித்து பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொங்கலூா் ஒன்றியம், வே.வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய்த் தொட்டிக்கரி ஆலையால் சுகாதார சீா்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த ஆலையை அதிகாரிகள் ஆய்வு செய்து மூட உத்தரவிட்டனா். இந்நிலையில், அந்த ஆலை மீண்டும் இயங்க சம்பந்தப்பட்ட துறையில் அந்த தனியாா் நிா்வாகம் விண்ணப்பித்திருப்பதாக தகவல் பரவியதைத் தொடா்ந்து, வாவிபாளையம், குள்ளம்பாளையம் கிராம பொதுமக்கள் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சதீஷ்குமாா், பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், திருப்பூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய (தெற்கு) செயற்பொறியாளா் ரங்கராஜ், உதவிப் பொறியாளா் நீலமேகம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுவரை கரித்தொட்டி ஆலை இயங்க உரிமம் வழங்கப்படவில்லை. இது குறித்து பல்லடம் வட்டாட்சியா் முன்னிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com