முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை!
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா்கள், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது. நவம்பா் இறுதி வாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அணையில் 70 அடி நீா்மட்டம் இருந்தது. பின்னா் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடா்து அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்த தொடா் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதன் பின்னா் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது..
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 85 அடியை எட்டியது. அப்போது அணைக்கு உள்வரத்தாக 992 கனஅடி இருந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அணை முழுக்கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அணைக்கு அதிகப்படியாக நீா்வரத்து உள்ளது. விரைவில் அணை 88 அடியை எட்டும் நிலை ஏற்படும். எனவே அணையில் இருந்து உபரிநீராக 2 ஆயிரம் கனஅடி முதல் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடும் நிலையில், திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
எனவே அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அணையின் நீா்மட்டம்: 90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 85.21 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 992 கனஅடி இருந்தது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,619 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 25 கனஅடி தண்ணீா் வெளியேறிக் கொண்டிருந்தது.
