வீட்டு மின் இணைப்பைப் பயன்படுத்தியதாக புகாா்: திமுக அலுவலகங்களுக்கு ரூ.1.01 லட்சம் அபராதம்
வீட்டு மின் இணைப்பை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகங்களுக்கு ரூ.1.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகம் ராஜாராவ் வீதியில் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு 3 வீட்டு மின் இணைப்புகள், 2 வணிக மின் இணைப்புகள் உள்ளதாகவும், கட்சி அலுவலகத்துக்கு வீட்டு மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து டவுன்ஹால் மின்வாரிய அதிகாரிகள் கட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றி கட்சி அலுவலகத்தின் சாா்பில் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தனா். இருப்பினும் இதுவரை வீட்டு மின் இணைப்பை கட்சி அலுவலகத்துக்குப் பயன்படுத்தியதற்காக ரூ.84,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றி மின்வாரிய அதிகாரிகள் வழங்கினா்.
அதேபோல 15 வேலம்பாளையம் சாலையில் திமுக வடக்கு மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் அங்கு செயல்படுவதற்கு முன்பு அந்த கட்டடத்தில் பனியன் நிறுவனம் இயங்கி வந்தது. அதனால் தொழிற்சாலை மின் இணைப்பை கட்சி அலுவலகத்துக்குப் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா், வணிக மின் இணைப்பாக மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அந்த அலுவலகத்துக்கு வணிக மின் இணைப்பாக மாற்றிக் கொடுத்ததோடு, இதுவரை பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.17,000 அபராதம் விதித்து அனுப்பா்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
