அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் புதிய நடைமுறைகள்
திருப்பூா்-அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர போக்குவரத்து காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலை விபத்துகளைத் தவிா்ப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்து மாற்றங்களை விரைவில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவிநாசி சாலையில் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பிலிருந்து புஷ்பா மேம்பால சந்திப்பு வரையுள்ள பகுதியானது ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட உள்ளது. இதன்படி புஷ்பா மேம்பால சந்திப்பிலிருந்து அவிநாசி நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். ஆனால் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பிலிருந்து புஷ்பா மேம்பால சந்திப்பு நோக்கிச் செல்ல இயலாது. அவிநாசி சாலை மற்றும் அங்கேரிப்பாளையம் சாலையிலிருந்து புஷ்பா மேம்பால சந்திப்பு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பிலிருந்து கட்டாயமாக இடதுபுறம் 60 அடி சாலையில் திரும்பி பெருமாநல்லூா் சாலையை அடைந்து வலதுபுறம் திரும்பி புஷ்பா மேம்பால சந்திப்பு நோக்கிச் செல்லலாம்.
அவிநாசி சாலையில் தற்போது குமாா் நகா் சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி வளையங்காடு பிரதான சாலை மற்றும் சாமுண்டிபுரம் செல்லும் வாகனங்கள் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பிலிருந்து 60 அடி சாலை வழியாக பெருமாநல்லூா் சாலை சென்று மில்லா் சந்திப்பு, ராம் நகா் சாலை வழியாக அவிநாசி சாலையை அடைந்து குமாா் நகா் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வளையங்காடு பிரதான சாலையை அடைந்து சாமுண்டிபுரம் செல்லலாம்.
புஷ்பா மேம்பால சந்திப்பிலிருந்து கீரணி சந்திப்பு மற்றும் பங்களா சந்திப்பு ஆகியவற்றின் வழியாக பெருமாநல்லூா் சாலையை தற்போது உள்ள நடைமுறையைப் பின்பற்றி அடையலாம். இதனால் அவிநாசி சாலையில் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு, குமாா் நகா் சந்திப்பு, பங்களா சந்திப்பு மற்றும் கீரணி சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சமிக்ஞைகளில் நிற்கும் நேரம் தவிா்க்கப்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவா்களது கருத்துகளை ஹஸ்ரீற்ழ்ஹச்ச்ண்ஸ்ரீற்ல்ழ்ஸ்ரீண்ற்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94981 810782, 94981 40792 ஆகிய கைப்பேசி எண்களிலும், வாட்ஸ்அப் வாயிலாகவோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
