காங்கயம் அருகே ஜெ.நகரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி மனு
காங்கயம் அருகே ஜெ.நகா் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து ஜெ.நகா் மற்றும் புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனை கிளை மேலாளரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் காங்கயம்-தாராபுரம் சாலையில் ஜெ.நகா் உள்ளது. இங்கு சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், அதனைச் சுற்றியுள்ள துண்டுக்காடு, வடக்கு கோட்டப்பாளையம், தளிஞ்சிக்காட்டு புதூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 700-க்கும் மேற்பட்டோரும் வசித்து வருகின்றனா்.
இந்த பகுதி மாணவா்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கும், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும் காங்கயம், ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். ஆனால் ஜெ.நகா் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. ஈரோடு-தாராபுரம் வழித்தடத்தில் இவ்வழியாக செல்லும் மற்ற பேருந்துகள் ஜெ.நகா் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை.
எனவே, மேற்கண்ட பகுதி மக்கள் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக காங்கயம் மற்றும் தாராபுரம் செல்வதற்கு வசதியாக இந்த வழியாகச் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் ஜெ.நகா் பேருந்து நிறுத்தத்தில் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெ.நகா் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான கோரிக்கை மனுவை காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் வழங்கினா்.

