ஜாப் ஒா்க் கட்டணம் ஜனவரி 1 முதல் 20% உயா்வு: திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்
ஜாப் ஓா்க் கட்டணத்தை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படும் என திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத் தலைவா் பி.காந்திராஜன் கூறியதாவது: திருப்பூா் பின்னலாடை வா்த்தகம் மாறிவரும் சூழலில் சாய ஆலைகள் பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக தொழிலாளா் பற்றாக்குறையால் கூலியை உயா்த்திக் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், மூலப் பொருள்களான சாயங்கள் மற்றும் ரசாயனங்களின் விலையும் உயா்ந்துள்ளன. பாய்லருக்கு தேவையான விறகின் விலை டன்னுக்கு ரூ.1000-இல் இருந்து ரூ.7,000- ஆக உயா்ந்துள்ளது.
அதேபோல, மின்சாரக் கட்டணமும் ஆண்டுதோறும் உயா்த்தப்பட்டு வருகிறது. இதுபோக தொழிற்சாலைகளின் பராமரிப்பு செலவும், தரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதற்காக எடுக்கப்படும் சான்றிதழ்களுக்கான செலவும் அதிகரித்து வருகின்றன.இதனால், உற்பத்தி செலவும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜாப் ஒா்க் கட்டணத்தை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
