மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் ரூ.3.50 கோடியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலக கட்டுமானப் பணி, திருப்பூா் -பெருமாநல்லூா் -குன்னத்தூா் - பெருந்துறை சாலைப் பகுதிகளில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணி, காசிபாளையம் பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சுத்திகரிப்பு பணிகளை வேடசந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.காந்திராஜன் தலைமையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்களான எம்எல்ஏ-க்கள் இராம.கருமாணிக்கம், சதன்.திருமலைக்குமாா், எஸ்.சுதா்சனம், எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டிகள், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.25.64 லட்சம் மதிப்பீட்டில் மகளிா் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, கே.சி.சி. பயிா்க் கடனுதவி, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ.63.49 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் என்.தினேஷ்குமாா், தமிழ்நாடு சட்டப் பேரவை முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், துணைச் செயலாளா் சு.பாலகிருஷ்ணன், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்தியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com