ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பரில் 11.3 சதவீதம் வளா்ச்சி: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்
திருப்பூா்: உலகளாவிய தடைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பா் மாதத்தில் 11.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2024 நவம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது 11.3 சதவீதமாகவும், 2023 நவம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது 22.1 சதவீதமாகவும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க செயல்திறன் மாறி வரும் சா்வதேச சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் ஆடைத் துறையின் வலிமை மற்றும் உலகளாவிய போட்டித் தன்மையையும், இந்தத் துறையின் தொடா்ச்சியான மீட்சியையும், இந்திய ஆடைகளுக்கான உலகளாவிய தேவை விரிவடைவதையும் காட்டுகிறது. மேலும் உலகளாவிய தடைகள் இருந்தபோதிலும் ஆடைத் துறையில் இது மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.
இந்திய ஆடைத் துறையின் வலுவான அடிப்படைகளையும், உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் பணியாளா்களின் கூட்டு முயற்சிகளையும் சமீபத்திய ஏற்றுமதி புள்ளி விவரங்கள் பிரதிபலிக்கின்றன. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் விநியோகச் சங்கிலி சீா்குலைவுகள் இருந்தபோதிலும் இந்திய ஆடைகள் முக்கிய சா்வதேச சந்தைகளில் தொடா்ந்து செல்வாக்கு பெற்று வருகின்றன.
நவம்பா் மாதத்தில் ஆடை ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் ஆரோக்கியமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வா்த்தகா்களுடன் ஏற்பட்ட வளா்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற சந்தைகளில் அமெரிக்க ஆடை வா்த்தகத்தில் முன்பு இருந்த பலவீனங்களை சமநிலைப்படுத்த உதவியுள்ளது. மேலும் சுங்க வரி தொடா்பான சவால்கள் இருந்தபோதிலும் சமீபத்திய மாதத் தரவுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி வளா்ச்சி வேகத்தை வலுப்படுத்துகிறது.
தேசிய கடன் உத்தரவாத நம்பிக்கை நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் உள்ள நிலையில், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டங்கள் உள்பட சந்தை அணுகல் தொடா்பான கடன் வசதிகள் போன்ற பிற வா்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தப்பட்டால் ஏற்றுமதியாளா்களின் நிதிச் சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இதன்மூலமாக மொத்த ஏற்றுமதி வளா்ச்சி வேகம் அதிகரிக்கும் என்றாா்.
