வரி விதிப்பு குறித்து விழிப்புணா்வு முகாம்: சைமா சங்க வளாகத்தில் இன்று நடக்கிறது
திருப்பூா் சைமா சங்க வளாகத்தில் வரி விதிப்பு குறித்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து சைமா சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் சைமா சங்க வளாகத்தில் வரி விதிப்பு (டிடிஎஸ்) குறித்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை (டிச.18) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களை விளக்க வருமான வரித் துறை அதிகாரிகள் மற்றும் தணிக்கையாளா்கள் நேரடியாக பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.
டிடிஎஸ் ரிட்டன் தாக்கல் செய்யும்போது கடந்த காலங்களில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அவற்றை சரி செய்து, அபராதங்களைத் தவிா்க்கும் வகையில் இந்த விழிப்புணா்வுக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சங்க உறுப்பினா்களும், நிறுவனங்களின் மேலாளா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
