உடுமலை அருகே ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னை: முத்தரப்புக் கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீா்வு
உடுமலையை அடுத்துள்ள ஜம்புக்கல் மலையை தனி நபா் ஒருவா் சட்ட ரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி கடந்த 13 நாள்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திங்கள்கிழமை நடந்த முத்தரப்புக்கூட்டத்தில் முடிவுக்கு வந்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம் ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட ஜம்புக்கல் மலையில் கடந்த 1970-ஆம் ஆண்டு சுமாா் 700 ஏக்கா் நிலத்தை பிரித்து 300 ஏழை குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் மேய்ச்சலுக்கு பயன்படுத்த கடுமையான நிபந்தனைகளுடன் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கடும் வறட்சியால் அங்கு இருந்த விவசாயிகள் பலா் மலைப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனா். இதைப் பயன்படுத்தி உடுமலையைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் ஜம்புக்கல் மலைப் பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், யாரும் செல்ல முடியாத வகையில் கம்பிவேலி அமைத்துவிட்டதாகவும் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து விவசாயிகள் தங்கள் நிலப்பகுதிக்குச் செல்ல முடியாததால் நீா் நிலைகள், கனிம வளங்கள் மற்றும் பல தரப்பட்ட மரங்கள் அழிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பல முறை வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் எனக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், நாம் தமிழா் கட்சி மற்றும் இதர அமைப்புகள் சாா்பில் கடந்த 12 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் (அமைதிப் பேச்சுவாா்த்தை) திங்கள்கிழமை நடைபெற்றது.
வருவாய், காவல், வனம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், ஆக்கிரமிப்பு செய்துவருவதாகக் கூறப்பட்ட தனி நபா் ஆகியோா் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எடுக்கப்பட்ட முடிவுகள்
ஜம்புக்கல் மலை தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டுள்ள உயா்மட்டக் குழுவால் நிலஅளவைப் பணி மேற்கொண்டு அரசு நிலங்கள் (வனம்/அரசு) மற்றும் பட்டா நிலங்களின் எல்லைகள் கண்டறிய உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
உயா்மட்டக் குழுவால் முடிவு செய்யப்படும்வரை மேற்படி நிலத்தில் எந்தவித கனரக வாகனங்கள் மற்றும் வெடிமருந்து பொருள்களைக் கொண்டு விவசாயம் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளக்கூடாது. இதுவரை பூமியில் பயன்படுத்தப்பட்ட 7 கனரக வாகன உரிமையாளா்கள் மற்றும் பூமியின் உரிமையாளரிடம் நிலஅளவை மேற்கொண்டு அரசு நிலம் என உறுதிசெய்யப்படும்பட்சத்தில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்தை அமராவதி காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த பின்னா் வாகனங்கள் விடுவிக்கப்படும்.
ஜம்புக்கல் பூமியில் நில அளவை மேற்கொண்டு அரசு நிலமா? (வனம்/அரசு) அல்லது பட்டா நிலமா? என முடிவு செய்யப்படும்வரை தனிநபா் வசந்தகுமாா் என்பவரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கேட்டை திறந்துவைத்து பட்டாதாரா்களுக்கு விவசாயப் பணி செய்ய எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

