தோ்தல் வாக்குறுதியில் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள்: கனிமொழி எம்.பி.
தோ்தல் வாக்குறுதியில் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் அதிகம் இடம்பெறும் என்று திமுக மகளிரணிச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி எம்.பி. கூறினாா்.
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிா் அணி மேற்கு மண்டல மாநாடு’ திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வரும் 29-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா், கோவை, கரூா், ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில் காரணம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றாா். கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூா் மகளிா் அணி அமைப்பாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: தொலைநோக்கு சிந்தனையுடன் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. அதனால் தமிழக பெண்கள் சாதனை படைப்பவா்களாக மாறி வருகின்றனா். 29-ஆம் தேதி நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிா் அணி மேற்கு மண்டல மாநாட்டில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாநாட்டுத் திடலில் நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்ட கனிமொழி எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. மாநாட்டில் பெண்கள் சிரமமின்றி கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மற்ற அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எங்கள் கட்சிக்கும் பொருந்தும் என்பதால் அதனை முறையாக பின்பற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும்.
தமிழ்நாட்டை கடன் மாநிலமாக திமுக ஆட்சியில் மாற்றிவிட்டனா் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய். அவரது ஆட்சிக்குப் பிறகு எந்த வளா்ச்சியும் இல்லாத கடன் மாநிலமாக விட்டுச் சென்றாா்.
திமுக தோ்தல் அறிக்கையில் கவா்ச்சிக்கான திட்டங்களை எதிா்பாா்க்க முடியாது. அதே சமயம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைத்தான் வாக்குறுதிகளாக வழங்குவோம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்லடம் வரும்போது திருப்பூா் மாநகராட்சி குப்பை பிரச்னைக்காக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்துவேன் என்று பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கூறியுள்ளாா். கருப்புக் கொடிக்கு அஞ்சுபவா்கள் திமுகவினா் அல்ல என்றாா்.
நிகழ்வில், எம்.பி.க்கள் கணபதி ப.ராஜ்குமாா், ஈஸ்வரசாமி, பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் வழக்குரைஞா் குமாா், திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், விவசாய தொழிலாளா் அணி மாநில துணைச் செயலாளா் பெத்தாம்பாளையம் ராஜசேகரன், பல்லடம் ஒன்றியச் செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், சீனிவாசன், துரைமுருகன், பல்லடம் நகரச் செயலாளா் ராஜேந்திரகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிறைவேற்ற முடிவதையே வாக்குறுதிகளாக அளிப்போம்
முன்னதாக திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்த கனிமொழி எம்.பி. கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக தோ்தல் அறிக்கைக் குழு நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே கோவையில் தொழில் துறையினா், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்படும். இது மக்களுடைய தோ்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வா் கூறியுள்ளாா். அதற்காக கோவையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் பெறப்படும். மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து, எவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றையே வாக்குறுதிகளாக அளிப்போம். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிலா் கூறுகின்றனா். ஆனால், உண்மை என்ன என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும் என்றாா்.

