கரைப்புதூரில் சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், கரைப்புதூா் ஊராட்சி, ஐயம்பாளையம் ஸ்ரீநகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சீரான மின் விநியோகம் இல்லாததால் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் அவதியடைந்து வருகின்றனா்.
ஒரு முனை மின்சாரத்தால் ஆழ்துளைக் கிணறு மோட்டா்களைகூட இயக்க முடியவில்லை. சில நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதால் மின்சாதனப் பொருள்களும் சேதமடைந்து வருகின்றன.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.
முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கோரிக்கை பதாகைகளை கழுத்தில் அணிந்து கோஷமிட்டனா்.