ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயிலில்  நடைபெற்ற கொடியேற்றம்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயிலில்  நடைபெற்ற கொடியேற்றம்.

சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

அவிநாசி: நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படுவதுமாக சேவூா் அறம் வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் சிதம்பரத்துக்கு அடுத்தபடியாக ஆருத்ரா தரிசன விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா தொடக்கமாக திங்கள்கிழமை காலை வாலீஸ்வரா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கொடி மர விநாயகா், கொடி மரம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில் மகாதீபாராதனையுடன் சூரியன்- சந்திரன், நந்தி உள்ளிட்டவைகள் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, கோயிலில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி திருவீதி உலா, திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனமா் நடராஜப் பெருமானுக்கு திரவிய அபிஷேகங்களுடன் ஆருத்ரா திரிசனமும், பிற்பகல் 12 மணிக்கு ராக தாளங்களுடன் மலா் அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு பிச்சாண்டவா் புறப்பாடு, மாலை 4 மணிக்கு சிவகாமியம்பாள் உடனமா் நடராஜப் பெருமான் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் திருவூடல் திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 7 மணி முதல் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து ஜனவரி 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீா் விழா, கொடி இறக்குதல் உள்ளிட்ட நிகழ்வுடன் ஆருத்ர தரிசனம் நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா், அறங்காவலா்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com