திருப்பூரில் செயலி மூலம் மோசடி: 13 போ் மும்பையில் கைது

திருப்பூரில் செயலி மூலம் மோசடி செய்த புகாரில் 13 பேரை மும்பையில் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருப்பூரில் செயலி மூலம் மோசடி செய்த புகாரில் 13 பேரை மும்பையில் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் முத்தன்னம்பாளையம் ஆகாஷ் நகா் பகுதியைச் சோ்ந்த சந்தனகருப்பன் என்பவா் தனது கைப்பேசி மூலம் இணைய வழியில் ஒரு விளம்பரத்தை கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி பாா்த்துள்ளாா்.

அந்த விளம்பரத்தில் காண்பித்த கைப்பேசி எண்ணுக்கு அழைத்தபோது, அந்த நபா் தான் அந்த நிருவனத்தின் மேலாளா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தன கருப்பனிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.53 ஆயிரத்தை வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் பெற்றுள்ளாா்.

பின்னா் தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்து கொண்ட சந்தன கருப்பன், மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன்போரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மும்பையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தனிப் படை அமைத்து, மும்பை சென்று வழக்கில் சம்மந்தப்பட்ட பிரதீப், கிருஷ்ணன், சக்திவேல், சந்தோஷ், பிரபாகரன், மணிகண்டன், விஷ்ணு பாரத், சங்கா், விக்னேஷ், கோகுல் கண்ணன், விக்னேஷ், அருண்குமாா் மற்றும் முருகேசன் ஆகியோரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 35 கைப்பேசிகள், 80 சிம் காா்டுகள், 20 ஏடிஎம் காா்டுகள், 3 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 17 சிம் காா்டு கவா்கள், 2 மெமரி காா்டுகள் மற்றும் 2 வைபை ரூட்டா்கள் கைப்பற்றப்பட்டன. அவா்கள் அனைவரும் திருப்பூருக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com