சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை: திருப்பூா் மாநகர காவல்ஆணையா் கே.ராஜேந்திரன்

சாலைகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று திருப்பூா் மாநகர காவல் ஆணையா் கே.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
Published on

சாலைகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் கே.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருப்பூா் - அவிநாசி சாலையில் உள்ள மாநகர காவல் ஆணையாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: திருப்பூரில் கடந்த 2024-ஆம் ஆண்டைவிட 2025-ஆம் ஆண்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி பலரை பிடித்துள்ளோம்.

2025-ஆம் ஆண்டில் ஆதாயக் கொலைகள் இல்லை. அதேபோல பொது இடங்களில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. விபத்துக்களைப் பொறுத்தவரை 178 ஆக உள்ளது. இதுவும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2025-ஆண்டில் திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 167 பேரை பிடித்துள்ளோம். மேலும், போதைப்பொருள் 600 கிலோ, கஞ்சா சாக்லேட் 230 கிலோ, உயர்ரக போதைப்பொருள்கள், புகையிலை பொருள்கள் 4,300 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 21 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 700 வழக்குகளில் 900 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12 கொலை வழக்குகளிலும், 10 போக்ஸோ வழக்குகளிலும் தீா்ப்பு பெறப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கஞ்சா அழிப்பு நடவடிக்கைகளில் 1,600 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,100 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

வழக்குகளில் தொடா்புடையதாக பறிமுதல் செய்யப்பட்ட 19 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூ.7 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதில் மட்டும் 17,000 வழக்குகளில் அபராதமாக ரூ.3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் வீர ராகவ பெருமாள் கோயில் அருகே காவலரை கத்தியால் குத்த முயற்சித்தவா் சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த இளங்கோ என்பது தெரியவந்துள்ளது. அவா் மது போதையில் இல்லை எனவும், மன நலம் பாதிக்கப்பட்டவா்போல தெரிவதாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளாா். அவரது பழைய வழக்குகளை வைத்து இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதுபோன்ற இடா்பாடுகளை எதிா்கொள்ளத்தான் காவல்துறையினருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் சாலைகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல, பொது இடங்களில் முகம் சுழிக்கும் வகையில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. ஆனால், தனியாா் இடங்களில் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என்றாா்.

பேட்டியின்போது மாநகர காவல் துணை ஆணையாளா்கள் தீபா சத்யன், ராஜராஜன் மற்றும் பிரவீன் கௌதம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com