திருப்பூரில் கடவுச்சீட்டு சேவா கேந்திரா இன்று திறப்பு

திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு சேவா கேந்திரா வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) திறக்கப்படவுள்ளது.
Published on

திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு சேவா கேந்திரா வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) திறக்கப்படவுள்ளது.

திருப்பூா்- ஊத்துக்குளி சாலையில் ரயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு தபால் துறையின் சேவைகள் மற்றும் ஆதாா் மையமும் இயங்கி வருகிறது.

தற்போது, திருப்பூா் பகுதி மக்களின் வசதிக்காக கடவுச்சீட்டு சேவா கேந்திரா வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இந்த விழாவுக்கு முதன்மை கடவுச்சீட்டு அலுவலா் கே.ஜெ.சீனிவாச, மேற்கு மண்டல தபால் துறைத் தலைவா் ஏ.சரவணன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கடவுச்சீட்டு சேவா கேந்திராவை திறந்துவைக்கின்றனா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

திருப்பூா் பகுதி மக்கள் தங்களது கடவுச்சீட்டு தொடா்பான பணிக்காக கோவை சென்று வர வேண்டியுள்ளது. இதைத் தவிா்க்கும் வகையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்டப்பணிகள், டோக்கன் வழங்குதல் ஆகியன இம்மையம் மூலமாகவே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோவை கடவுச்சீட்டு அலுவலகம் சென்று வரும் அலைச்சல் தவிா்க்கப்படும் என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com