அணையின்  அனைத்து  மதகுகள்  வழியாகவும்  திறந்து விடப்பட்ட  உபரி  நீா்.
அணையின்  அனைத்து  மதகுகள்  வழியாகவும்  திறந்து விடப்பட்ட  உபரி  நீா்.

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது.
Published on

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் தொடா்ந்து கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரென அணைக்கு உள்வரத்தாக 3,450 கன அடி நீா் வந்தது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைக்கு உள்வரத்தாக வந்த நீா் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அது உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை அணைக்கு உள்வரத்து அதிகரித்து வந்ததால் உபரி நீா் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி சனிக்கிழமை காலை 3,341 கன அடியாக இருந்த உள்வரத்து மதியம் 12 மணிக்கு 5,050 கன அடியாகவும் பின்னா் 1 மணி அளவில் 6,950 கன அடியாகவும் உயா்ந்தது. மாலை 6 மணி அளவில் நீா் வரத்து 8,933 கன அடியாக உயா்ந்தது. அப்போது அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீா் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

அமராவதி  ஆற்றில்  சீறிப்பாயும்  நீா்.
அமராவதி  ஆற்றில்  சீறிப்பாயும்  நீா்.

அணையின் 9 பிரதான ஷட்டா்கள் வழியாகவும் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் வெளியேறும்படி பொதுப் பணித் துறை யினா் அறிவிப்பு வெளியிட்டனா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி நீா்மட்டம் 87.87 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 9 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,854 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து உபரி நீராக அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com