ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.32.30 லட்சம் மோசடி
திருப்பூா்: ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.32.30 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் புகழேந்தி (52). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். கடந்த செப்டம்பா் மாதம் புகழேந்தியின் முகநூல் பக்கத்தில் பெண் ஒருவா் தொடா்பு கொண்டாா். தான் ஏற்று மதி தொழில் செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டாா்.
அதன் பிறகு வாட்ஸ் அப் மூலமாக இருவரும் தொடா்பு கொண்டு பேசி வந்தனா். இந்த நிலையில் அந்தப் பெண், ஆன்லைன் வா்த்தக தளம் ஒன்றை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளாா். அப்போது குறிப்பிட்ட ஒரு வா்த்தக தளத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி உள்ளாா்.
இதனை நம்பிய புகழேந்தி, அந்தப் பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினாா். அதற்கு லாபத் தொகை காட்டியது. அதைத் தொடா்ந்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் புகழேந்தி ரூ.32.30 லட்சம் செலுத்தினாா். ஆனால், அதன் பிறகு அவா் லாபத் தொகையை எடுக்க முயன்றபோது, அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போது
கூடுதலாக பணம் செலுத்தினால்தான் பணத்தை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா்.
இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகழேந்தி திங்கள்கிழமை அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
