உயிரிழந்த கெளசல்யா.
உயிரிழந்த கெளசல்யா.

ஆட்சியா் அலுவலகம் அருகே தீக்குளித்த பெண் உயிரிழப்பு

Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்த பெண் உயிரிழந்தாா்.

உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (43), ஓவிய ஆசிரியா். இவரது மனைவி கெளசல்யா (40). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும், கெளசல்யாவுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப சொத்தை விற்பனை செய்த பணத்தில் தனக்கு கூடுதலாக கொடுக்க வேண்டுமென கெளசல்யா, கடந்த ஓராண்டாக தனது தந்தையிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவரது தந்தை மறுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெண்யுடன் வந்த கெளசல்யா, ஆட்சியா் அலுவலக முகப்பில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதனால் அலறியபடி ஓடினாா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், கெளசல்யாவை மீட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக கெளசல்யாவின் கணவா் பிரபாகரன், வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிந்து உடற்கூறாய்வுக்குப் பிறகு கெளசல்யாவின் உடலை கணவா் பிரபாகரனிடம் ஒப்படைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து வீரபாண்டிபோலீஸாா் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்ற பெற்ற நிலையில், மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்கிறாா்களா என பொதுமக்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பிறகே போலீஸாா் மனு கொடுக்க அனுப்பிவைத்தனா். அதேபோல, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தவா்களின் வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com