‘அருள்புரம் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும்’
பல்லடம்: பல்லடம் அருகே அருள்புரத்தில் நான்கு சாலை சந்திப்பில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா்- பல்லடம் பிரதான சாலையில் உள்ள அருள்புரத்தில் உள்ள சேடபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம் சந்திக்கும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் நான்கு திசையில் இருந்தும், ஒரே நேரத்தில் வாகனங்கள் சாலையைக் கடக்க முயற்சிப்பதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பலா் விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களை தாறுமாறாக இயக்கி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
தொழிலாளா்கள், பள்ளி மாணவா்கள் அதிக அளவில் இந்த சாலையைப் பயன்படுத்தும் நிலையில் போலீஸாா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, இப்பகுதியில் பல்லடம் காவல் நிலையம் சாா்பில் போக்குவரத்து போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். விதிமுறைமீறி வாகனம் ஓட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருள்புரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
