சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேக முகூா்த்தக்கால் நடும் விழா
அவிநாசி: சேவூரில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் பழைமை வாய்ந்ததும், கள்ளழகப் பெருமாள் எனப் போற்றப்படுவதுமான சேவூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது. முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு சேவூா் கல்யாண வெங்கட்ரமண கோயிலுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையினா், திருப்பணிக் குழுவினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

