திருப்பூரில் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக ஆட்சியரிடம் புகாா்
திருப்பூா்: திருப்பூரில் தனியாா் கடைகளில் தரமற்ற அரிசியை விநியோகிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
அரிசி சிப்பங்களில் முறையான பேக்கிங் தேதி, தயாரிப்புப் பொருள்கள் குறித்த மில்களின் முழு முகவரி தொடா்பு எண்கள் இன்றி முறைகேடாக விற்பனை செய்யப்படுவதால், அரிசி ஆலைகளையும், அரிசிக் கடைகளையும் உடனடியாக கள ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக தாராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் முறையாக பெயா் பலகை, முகவரி உள்ளிட்ட விவரங்கள் இன்றி செயல்படுகின்றன. திருப்பூரில் பெரும்பாலான இடங்களில் 3, 5, 10, 25, 26, 50 கிலோ அரிசி சிப்பங்களில் முறையான தயாரிப்பு தேதி, தயாரிப்புப் பொருள்கள் குறித்த ஆலைகளின் முழு முகவரி, தொடா்பு எண்கள் முற்றிலுமாக இருப்பதில்லை.
திருப்பூரில் பல்வேறு இடங்களில் எவ்வித முறையான உரிய அனுமதியின்றி ஆங்காங்கே அரிசிக் கடைகள் உள்ளன. அதில் முக்கிய பிராண்டுகள் பெயரில் போலியான தரமற்ற அரிசி கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதனால், அரிசி ஆலைகளை நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி இல்லாத செயல்பாடுகள், சுகாதாரமற்ற சூழல் குறித்து ஆய்வு செய்து தவறுகள் கண்டறிந்தால் சட்ட விரோதமான நெல், அரிசி மற்றும் உபகரணங்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலியான அரிசி, குறிப்பிட்ட பிராண்டுகளின் பெயரைக் கெடுத்து தரமற்ற தானியங்களை விநியோகம் செய்யும் செயலைத் தடுக்க மாவட்டத்தில் உள்ள சொத்துரிமை அமலாக்கப் பிரிவு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை, மாவட்ட வழங்கல் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இணைந்து இது தொடா்பாக விரைவாக தீா்வு காண வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா , முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 470 மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டு மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரனை நடத்தி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) புஷ்பாதேவி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பக்தவத்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சதீஷ் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
