சிறுவன் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருப்பூா்: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சீதா நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (61). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த 2022 மே மாதம் 10 வயது பள்ளி சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதுதொடா்பாக தாராபுரம் மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆரோக்கியதாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆரோக்கியதாஸுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
