பல்லடம் கிராமப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியில் போலீஸாா் தீவிரம்

பல்லடம் கிராமப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
Published on

பல்லடம்: பல்லடம் கிராமப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பனியன் நிறுவனங்கள்,விசைத்தறி, கோழிப் பண்ணைகள், கல்குவாரி தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகின்றனா். இதனால் பல்லடம் புகா் பகுதிகளில் அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிசிடிவி கேமராக்கள்தான் போலீஸாருக்கு உதவிகரமாக உள்ளன.

எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு போலீஸாா் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், பல்லடம் போலீஸாா், கிராமப்புறப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை விரிவுபடுத்தி உள்ளனா்.

கரைப்புதுாா், அருள்புரம், ராயா்பாளையம், மகாலட்சுமி நகா், வடுகபாளையம்புதுாா், சித்தம்பலம்புதுாா், பணிக்கம்பட்டி, சின்னக்கரை, கோடங்கிபாளையம், பருவாய் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஊா்களில் மொத்தம் 246 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல செம்மிபாளையம் ஊராட்சி சாா்பில் அந்த ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்ட்ரோல் ரூம் அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

பல்லடம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தனியாா் நிறுவனங்களில் உள்ள சமூகப் பொறுப்புணா்வு நிதியை பயன்படுத்தி, கிராமப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகளும் கண்காணிப்பில் உள்ளன. விரைவில், காவல் நிலைய வளாகத்திலேயே கண்காணிப்பு அறை உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்த சிசிடிவி கேமராக்களின் பதிவும் ஒரே இடத்தில் கண்காணிக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com