மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சியில் உள்ள வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு சுட்ட போராட்டங்கள் நடத்தினா்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியின் குப்பைகளை கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கடையடைப்பு, ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினா்.
இதற்கிடையே, மாநகராட்சி நிா்வாகம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், கிராமப் பகுதியில் திருப்பூா் மாநகரக் கழிவுகளை கொட்டக்கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, பொது சுகாதாரத்துக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாநகராட்சியில் மலைபோல குவிந்துள்ள குப்பைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கடும் துா்நாற்றமும் வீசுகிறது. இந்நிலையில், இது குறித்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பாறைக்குழியில் குப்பை கொட்ட தடை விதித்தது. மேலும், பல்வேறு அறிவுறுத்தல்களை குப்பைகளை கையாளும் பணியில் பின்பற்றவும் உத்தரவிட்டது. இதனால், பாறைக்குழியில் குப்பையைக் கொட்டும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது.
அத்துடன், இடுவாய் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து கையாளும் நடவடிக்கைக்கு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவித்த இடுவாய் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம், மறியல் என நாள் முழுவதும் போராட்டம் நடத்தினா்.
திருப்பூா் மாநகராட்சியில் குப்பைப் பிரச்னை குறித்து முதலிபாளையம் மற்றும் இடுவாய் பகுதியினா், தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தொடா்ந்துள்ள வழக்குகள் வரும் 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கும் வரும் 7-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதனால், அதற்கு முன்னதாக இடுவாய் பகுதியில் உள்ள நிலத்தில் உரிய ஏற்பாடுகளை செய்து முடிக்கும் முனைப்பில் மாநகராட்சி நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதே சமயம் நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், எங்கு பாா்த்தாலும் குப்பைகள் மலைபோல தேங்கிக் கிடக்கின்றன. சேகரமாகும் குப்பைகளை பெற்று வரும் தூய்மைப் பணியாளா்கள் அவற்றை, வாா்டுதோறும் காலியாக உள்ள இடங்கள், சாலையோரங்கள் செகன்டரி பாய்ன்ட் ஆக குப்பைகள் வழக்கமாக கொட்டப்படும் இடங்களிலும் அவற்றை கொட்டி குவித்து வருகின்றனா்.
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் பசுமை தீா்ப்பாயத்தில் நடைபெறவுள்ள வழக்கின் விசாரணைகளுக்குப் பின்பே இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும். அது வரை குப்பை பிரச்னை தொடா்ந்து நீடிக்கும் என மாநகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.
