பல்லடம் தபால் நிலையத்தில் இணையதளப் பிரச்னையால் சேவைகள் பாதிப்பு

Published on

பல்லடம் தபால் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் இணையதளப் பிரச்னையால் சேவைகள் பாதிப்படைந்து வருகிறது.

பல்லடம் ஜெயபிரகாஷ் வீதியில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்கள், விசைத்தறிக்கூடங்களில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தபால், மணியாா்டா் மூலம் பணம் அனுப்பி வருகின்றனா்.

மேலும் பொதுமக்கள் சிறுசேமிப்பு, அரசு ஊழியா்கள் சம்பளம் மற்றும் பணி ஓய்வு பெற்றவா்கள் பென்ஷன் உள்ளிட்டவற்றுக்காக தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பல்லடம் தபால் நிலையத்தில் கடந்த சில நாள்களாக இணையதளப் பிரச்னை ஏற்பட்டு அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் சிறு சேமிப்பில் பணம் செலுத்துவது மற்றும் பணம் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

எனவே, பல்லடம் தபால் நிலையத்தில் இணையதளக் கோளாறை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com