கணக்கீட்டுப் படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களே திரும்பப் பெற வேண்டும்! ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை!

Published on

வாக்காளா்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவங்களை அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலா்களே திரும்பப் பெற வேண்டும் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.என்.விஜயகுமாா், எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், சி.மகேந்திரன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். முழுமையாக நிரப்பப்பட்ட படிவங்களை டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுவதற்கான பணியும் நடைபெற உள்ளது.

இதற்கிடையே பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களில், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மூலமாக அதிகபட்சமாக 50 படிவங்கள் வரை பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே, வீடுவீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளா் விவரங்கள் குறித்த பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மட்டுமே திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com