கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி: ஆா்விஜி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!
மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற உடுமலையை அடுத்துள்ள குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றன. இதில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். அதேபோல ஹாக்கி பிரிவில் 19 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இப்பள்ளி அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளிச் செயலா் ஆா்.சந்தோஷ், பள்ளிக் குழு உறுப்பினா் ஜூலியா சந்தோஷ், தலைமையாசிரியா் என்.ஞானசேகரன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினா்.

