மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது
வெள்ளக்கோவில் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் அருகேயுள்ள கணபதிபாளையம் அப்பியங்காட்டைச் சோ்ந்தவா் பெரியசாமி (75). இவரது மனைவி புஷ்பாத்தாள் (70). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், பெரியசாமி, புஷ்பாத்தாள் இருவரும் ஆடு, மாடுகளை வளா்த்து வந்தனா். அவற்றைக் கவனிக்க முடியாததால் விற்பனை செய்துள்ளனா். அந்தப் பணத்தை புஷ்பாத்தாள் மட்டுமே வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம்போல சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பெரியசாமி வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து புஷ்பத்தாளை அடித்துள்ளாா். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீஸாா், பெரியசாமியைக் கைது செய்தனா்.

