குப்பைகளை அகற்றக் கோரி மறியல்: வடமாநில தொழிலாளா்கள் 50 போ் கைது

திருப்பூரில் குப்பைகளை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளா்கள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருப்பூரில் குப்பைகளை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளா்கள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்ட இடமின்றி அந்தந்த பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பூா் மாநகா் முழுவதும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் சிறுபூலுவப்பட்டி சாலையில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் குப்பைகள் குவித்துவைக்கப்பட்டு உள்ளதால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதாகவும், குப்பைகளை அகற்றக் கோரியும் 300-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் முகக்கவசம் அணிந்தபடி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேலம்பாளையம் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் கலைந்து செல்லும்படி கூறினா். இதனால் அவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. பின்னா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com