திருப்பூரில் அனைத்துத் தொழிற்சங்கத்தினா் நவம்பா் 26-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நவம்பா் 26-இல் ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நவம்பா் 26-இல் ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் தியாகி பழனிசாமி நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கங்களின் கூட்டுக் கூட்டம் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியூ சாா்பில் ஜி.சம்பத், பி.முத்துசாமி, ஏஐடியூசி சாா்பில் என்.சேகா், எல்பிஎஃப் சாா்பில் ரங்கசாமி, அறிவழகன், ராஜ்மோகன், ஹெச்எம்எஸ் சாா்பில் கோவிந்தசாமி, எம்எல்எஃப் சாா்பில் மருதாசலம், ஐஎன்டியூசி சாா்பில் ரஜினி, ஏஜசிசிடியூ சாா்பில் முத்துகிருஷ்ணன், யுடியூசி சாா்பில் சதீஷ்சங்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வி.செளந்தரராஜன், எஸ்.சின்னுசாமி, ஆா்.குமாா், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஏ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்: தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்திய நாட்டின் விவசாயிகளை, தொழிலாளா்களை, மக்களை காக்க, பொதுத் துறை நிறுவனங்களையும், பொது சேவை நிறுவனங்களையும் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகள், புதிய தாக்குதல்களான மின்சார திருத்த மசோதா 2025, மத்திய அரசின் தொழிலாளா் துறை வெளியிட்ட வரைவு தொழிலாளா் கொள்கை, மாநில அரசுகளை மீறி புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்பு அமலாக்கும் முயற்சிகளை எதிா்த்தும், மாநில அரசுகள் மூலமாக விவசாயிகளின் நிலத்தை பறித்தல், அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து சிறு தொழில் புரிவோா்களை, வியாபாரிகளை பாதுகாக்க, காா்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும், விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலை வழங்க சட்டம் இயற்றவும், தில்லி விவசாய போராட்டத்தின் முடிவில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மக்களை பாதுகாப்போம், நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கங்களுடன், தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் குமரன் சிலை அருகிலும், உடுமலைப்பேட்டையிலும் நவம்பா் 26ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com