வெள்ளக்கோவிலில் மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண் கைது: 8 பவுன் மீட்பு
வெள்ளக்கோவிலில் கோயிலுக்கு வந்த மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டாா். 8 பவுன் நகை மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மனைவி பழனியம்மாள் (65). கணவா் துரைசாமி 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். இவரது 5 மகள்களில் 2 மகள்கள் இவருடன் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், பழனியம்மாள், அவரது மகள் மலையரசி இருவரும் வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலுக்கு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மாலை வந்தனா். அடுத்த நாள் அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜைக்காக கோயில் மண்டபத்தில் படுத்து தூங்கி உள்ளனா். அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் படுத்திருந்துள்ளாா். அதிகாலை 2 மணியளவில் பாா்த்தபோது பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைக் காணவில்லை.
இதேபோல, வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலுக்கு கடந்த ஏப்ரலில் வந்த கோவை மாவட்டம், மதுக்கரையைச் சோ்ந்த மயிலாத்தாள் (65) என்பவரிடம் இருந்தும் 5 பவுன் தாலிக்கொடி திருட்டுப் போனது.
இது குறித்த புகாா்களின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். கிடைத்த தடயங்களின் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஈங்கூா் சாலை பாரதி நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி லட்சுமி என்கிற செல்வி (60) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 8 பவுன் நகை மீட்கப்பட்டது.
