ஊதியூா் அருகே காா் கவிழ்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஊதியூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் படுகாயமடைந்தனா்.
பல்லடம் மாணிக்காபுரம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் (20), திருப்பூா் பெருந்தொழுவு பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் (20), செவந்தம்பாளையத்தைச் சோ்ந்த தீபக் (20), அறிவொளி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (20), திருப்பூா் இடுவாய் பகுதியைச் கோகுலகிருஷ்ணன் (20) ஆகியோா் கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனா்.
இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஒரு காரில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனா். திருப்பூா்-தாராபுரம் சாலை, என்.காஞ்சிபுரம் செங்காட்டு தோட்டம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக காா் நிலைதடுமாறி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், கதிா்வேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மற்ற நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
