நீா் மட்டம்  உயா்ந்துள்ள  நிலையில்  திருமூா்த்தி  அணை.
நீா் மட்டம்  உயா்ந்துள்ள  நிலையில்  திருமூா்த்தி  அணை.

முழுக் கொள்ளளவை எட்டும் திருமூா்த்தி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின்கீழ் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறைவைத்து தண்ணீா் விடப்பட்டு வருகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வந்தது. திங்கள்கிழமை இரவு நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 52 அடியாக உயா்ந்தது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோர மக்களுக்கு அதாவது உடுமலையின் மேற்கு கிராமங்களான அா்த்தநாரிபாளையம், தேவனூா்புதூா், பழையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அணைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் காண்டூா் கால்வாயிலும் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 4 மண்டல பாசனப் பகுதிகளுக்கு பிரதான கால்வாயின் மூலம் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் உபரி நீா் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

அணை நிலவரம்:

60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்மட்டம் 53.30 அடியாக இருந்தது. நீா்வரத்து 984 கன அடியாக

உள்ளது. அணையில் இருந்து 27 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. 1,935 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,646.90 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

பஞ்சலிங்க அருவியில் குளிக்க 4-ஆவது நாளாக தடை

திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது.

பஞ்சலிங்க  அருவியில்  ஏற்பட்டுள்ள  வெள்ளப்  பெருக்கு.
பஞ்சலிங்க  அருவியில்  ஏற்பட்டுள்ள  வெள்ளப்  பெருக்கு.

X
Dinamani
www.dinamani.com