நல்லூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
நல்லூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை
Published on

திருப்பூா்: முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்று பலமணி நேரம் காக்க வைத்ததைத் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கடந்த பல ஆண்டுகளாக கொட்டி வந்ததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

மேலும் நிலத்தடி நீரும் வெகுவாக மாசடைந்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இனி குப்பைகளை பாறைக்குழிக்குள் கொட்டக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதைத் தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தியது.

இதற்கிடையே இப்பிரச்னை தொடா்பாக நல்லூா் முதலிபாளையம் சுற்றுச்சூழல் குழு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதலிபாளையம் பிரச்னை தொடா்பாக தமிழக முதல்வரை நேரில் சந்திக்க செல்வதாக நல்லூா் முதலிபாளையம் சுற்றுச்சூழல் குழுவினா் முடிவு செய்திருந்தனா்.

அத்துடன் இப்பிரச்னையைக் கண்டித்து ஈரோட்டிற்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில் நல்லூா் முதலிபாளையம் சுற்றுச்சூழல் குழுவைச் சோ்ந்த பலருக்கு நல்லூா் காவல் நிலையத்திலிருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டு அவா்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனா். மேலும் சிலரை உறவினா்கள் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, காவல் துறையினா் அங்கு சென்று அழைத்து வந்துள்ளனா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் 4 பேரை நல்லூா் காவல் நிலையத்துக்கு சென்ற போலீஸாா் பல மணி நேரம் காவல் நிலையத்தில் காக்கவைத்து காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதி பெண்கள் ஏராளமானோா் முதலிபாளையம் பகுதியை சோ்ந்த பொதுமக்களுடன், நல்லூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா், அந்தப் பெண்களை காவல் நிலையத்தில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினா். ஆனால் பெண்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டம், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டதைதத் தொடா்ந்து கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com