இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
பல்லடம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல்லடம், அறிவொளி நகா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள், பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷுடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டம், கல்லம்பாளையத்தில் நத்தம் புறம்போக்கு நிலம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் பட்டா வழங்கக் கோரி 24 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், தகுதியானவா்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்க நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் பட்டா வழங்க தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
