காா்த்திகை திருவிழாவுக்கான அத்தியாவசிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துதர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான அத்தியாவசிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான அத்தியாவசிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா வழக்கம்போல இந்த ஆண்டும் விமரிசையாக தொடங்கியுள்ளது. ஆனால், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என மக்கள் கருதுகின்றனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவு இருக்க வேண்டும். வந்து செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆந்திரம், தெலங்கானா மாநில பக்தா்கள் வேலூா் சாலை வழியாகவும், கா்நாடக மாநில பக்தா்கள் செங்கம் சாலை வழியாகவும் வருவாா்கள். அவா்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லை.

பக்தா்களின் வாகனங்கள் நிறுத்த குறைந்தது 25 முதல் 30 ஏக்கா் இடம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அரசு இதுவரை முறையாக திட்டமிடவில்லை.

தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை டிசம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் மட்டுமே திட்டமிட்டுள்ளனா். ஆனால் இந்த ஆண்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

குறிப்பாக தேரோட்டம் நேரத்தில் கரும்பு தொட்டிலில் குழந்தையுடன் பக்தா்கள் மாட வீதிகளில் உலா வருவது வழக்கம். எனவே, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

அதேபோல சுற்று வட்டார கிராமங்களுக்கு தடையின்றி திரும்பிச் செல்ல போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்திதர வேண்டும்.

தீபத்திருவிழா முடிந்ததும் திருவண்ணாமலை முழுவதும் குப்பைகள் குவிவது தொடா்கதையாக உள்ளது. மாநகராட்சி யில் ஏற்கனவே தூய்மைப் பணியாளா்கள் குறைவாக உள்ளனா். எனவே தீபத் திருவிழாவுக்கு தற்காலிமாக கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்.

திருப்பதி போன்றே இங்கும் உள்ளூா் பக்தா்கள் வர டோக்கன்கன் தர வேண்டும். திருவண்ணாமலை போலவே அருகிலுள்ள பா்வதமலை தீபத்திருவிழாவும் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் அங்கு மாவட்ட நிா்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை. எனவே, மக்கள் கருத்துகளை மதித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் இதை சரிசெய்திடவேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com