நொய்யல் ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ்
நொய்யல் ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு இயற்கையை பாதுகாக்க தெரியாது: அன்புமணி

திமுகவுக்கு இயற்கையை பாதுகாக்க தெரியாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
Published on

திமுகவுக்கு இயற்கையை பாதுகாக்க தெரியாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலந்து மாசடைந்துள்ளதாகவும் நொய்யல் ஆற்றின் மாசுபாட்டை தடுத்து மீட்க வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருப்பூா் வளம் பாலம் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக நொய்யல் ஆற்றில் கழிவுநீா் கலப்பது குறித்து பாா்வையிட்ட அன்புமணி ராமதாஸ், பின்னா் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: நொய்யல் ஆறு என்றால் நோய்களை தடுத்து காக்கும் ஆறு என்று அா்த்தம். இன்று அதில் இறங்கினால் உலகின் அத்தனை நோயும் வரும். நீா்நிலைகளை மாசுபடுத்தி நீா் மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாமல் திமுக ஆட்சி செய்கிறது.

வெள்ளிங்கிரி மலையின் மூலிகைகளை கொண்டு வந்த நொய்யல், இப்போது காவிரி ஆற்றின் கிளையாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 180 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. முதல் 20 கி.மீ. தொலைவில் உள்ள நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். கோவையில் நுழைந்த பின்னா் செங்கல் சூளை கழிவு, மனிதக் கழிவு, ரசாயனம், தொழிற்சாலை, சாயக் கழிவு என கலந்து மோசமான நிலையில் நொய்யல் ஆறு உள்ளது. தினமும் 9 கோடி லிட்டா் கழிவுநீா் நொய்யலில் கலக்கிறது. தூய்மையான ஆற்றை சாக்கடையாக மாற்றி உள்ளனா். சென்னையில் கூவம் ஆற்று நீரை எடுத்து கோயிலில் பூஜை செய்தாா்கள். இன்று சாக்கடையாக மாறி உள்ளது. இதேபோல வைகை, தாமிரபரணி ஆறுகளும் சாக்கடையாக மாறியுள்ளது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் நொய்யல், பவானி, அமராவதி ஆறுகளை சீா் செய்வோம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட அகற்றவில்லை. நொய்யல் ஆறு மூலம் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 3,500 சதுர கி.மீ. நகரப் பகுதிகள் நிலத்தடி நீா் பெறும். ஆற்றைக் கூட பாதுகாக்க முடியாத ஆட்சி நடைபெறுகிறது. அணையை திறக்க போராடும் மக்களிடையே, ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து நீரைத் திறக்க வேண்டாம் எனப் போராடுகின்றனா். அவ்வளவு கழிவுடன் நொய்யல் ஆறு உள்ளது. அந்த அணையில் உள்ள நீரின் டிடிஎஸ் அளவு 20 ஆயிரம் எனும் நிலையில் உள்ளது.

இந்த நொய்யல் நீா்தான் சென்னை வீராணம் வரை செல்கிறது. அந்த நீரைத்தான் சென்னையில் நாங்கள் குடிக்கிறோம். வெள்ளம் வந்தாலும் வறட்சி வந்தாலும் , மீனவா் பிடிபட்டாலும் முதல்வா் கடிதம் மட்டுமே எழுதுவாா், அது மட்டும்தான் அவருக்கு தெரியும்.

மக்கள் அழுத்தம் கொடுத்தால்தான் எதுவும் நடக்கும். திமுகவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காதீா்கள். ஆற்றை முதலில் காப்பாற்ற வேண்டும். அதற்கு தமிழக மக்கள் ஒன்று சோ்ந்து தக்க பாடத்தை புகட்ட வேண்டும். இயற்கையை அழித்து ஒழித்து விடுவாா்கள். திமுகவுக்கு இயற்கையை பாதுகாக்க தெரியாது என்றாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இருமடங்காக உயா்ந்துள்ளது. ஆனால் புதிய முதலீடுகள் வருவதாக திமுக பொய்யை மட்டுமே பரப்பி வருகிறது. தோ்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன். கரூா் சம்பவம் தொடா்பான முழு உண்மைகளும் சிபிஐ விசாரணையில் தெரியவரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com