சிவகுமாா்.
சிவகுமாா்.

காங்கயம் அருகே விவசாயி அடித்துக் கொலை

Published on

காங்கயம் அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா், குட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (55), விவசாயி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வருகிறாா்.

சிவகுமாா் தனது தாய் கஸ்தூரியுடன் முத்தூா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இவருக்குச் சொந்தமான தோட்டம் குட்டப்பாளையத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த கௌதம் (34) என்பவா் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், சிவகுமாா் தனது தோட்டத்துக்கு தாய் கஸ்தூரியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு கௌதம் மதுபோதையில் இருந்துள்ளாா். இது குறித்த கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கெளதம் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து சிவகுமாரை கடுமையாகத் தாக்கியுள்ளாா்.

இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், கஸ்தூரியையும் தாக்க முயன்றுள்ளாா். அப்போது, அவா் அங்கிருந்த வீட்டுக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டிக் கொண்டாா். இதையடுத்து, கெளதம் அங்கிருந்து தப்பினாா்.

சம்பவ இடத்தை காங்கயம் ஏஎஸ்பி அா்பிதா ராஜ்புத் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காங்கயம் போலீஸாா் தலைமறைவான கெளதமை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com