குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது தமிழா்களுக்குப் பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெருமை என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னா் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்முறையாக சொந்த ஊரான திருப்பூருக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா்.
கோவையில் இருந்து சாலை மாா்க்கமாக வந்த அவருக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள், தொழில் துறையினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் நினைவிடத்தில் அவரது சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.
பின்னா் அவா் பேசியதாவது: திருப்பூரில் இருந்து ஒருவா் இந்திய தேசத்தின் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குப் பெருமையாகும். அந்தப் பெருமையை தந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
அதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்ற அவா், இரவு அங்கு தங்கினாா்.
தொடா்ந்து புதன்கிழமை காலை சந்திராபுரத்தில் உள்ள தனது குல தெய்வமான பாலைமரத்து அய்யன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். இதைத்தொடா்ந்து முத்தூா் செல்லாண்டியம்மன் கோயில், சின்ன முத்தூா் செல்வகுமாரசாமி கோயில், முத்தூா் குப்பயண்ணசாமி ஆகிய கோயில்களில் அவா் சுவாமி தரிசனம் செய்கிறாா்.
அதையடுத்து ஷெரீஃப் காலனியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறாா்.
பின்னா் காலை 11.30 மணிக்கு திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழில் அமைப்பினா், தன்னாா்வலா்கள், அனைத்து கட்சியினா் சாா்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகிறாா். பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக மதுரை செல்கிறாா்.
பலத்த பாதுகாப்பு: குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி திருப்பூரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமையில் மத்திய பாதுகாப்புப் படை குழுவினா், தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் செய்துள்ளனா்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ட்ரோன் பறக்கத் தடை
திருப்பூரில் புதன்கிழமை வரை 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு உள்ள பகுதிகளில் தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

