சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் அருகே பழங்கரை பெரியாயிபாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (62), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். இவா் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். அந்த வீட்டில் தொழிலாளி ஒருவா் குடும்பத்துடன் குடியிருந்தாா்.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு வாடகை வீட்டில் குடியிருந்த தொழிலாளியின் 10 வயது மகளை கொஞ்சி விளையாடுவதுபோல ரத்தினசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரத்தினசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி கோகிலா அளித்த தீா்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரத்தினசாமிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
