பல்லடத்தில் புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணிக்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.

பல்லடத்தில் ரூ.54 கோடியில் புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Published on

பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் ரூ.54 கோடி மதிப்பில் 7.60 கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூா், மதுரை, பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. பல்லடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சரக்கு போக்குவரத்துக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.

பல்லடம் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு முதல் பனப்பாளையத்தில் தாராபுரம் சாலை பிரிவு வரையிலான 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் பல்லடத்தில் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு அண்மையில் அறிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து திருப்பூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் பணிக்கம்பட்டி பிரிவில் தொடங்கி பல்லடம் - தாராபுரம் சாலையை இணைக்கும் வகையில் 7.60 கிலோ மீட்டருக்கு ரூ.54 கோடி மதிப்பில் இணைப்புச்சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com