அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இருமடங்காகும்- குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இருமடங்காகும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டாா்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின்னா் தமிழகத்துக்கு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை (அக். 28) வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, பேரூா் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் அவா் திருப்பூருக்குச் சென்றாா்.
தனது சொந்த ஊரான திருப்பூருக்கு முதன்முறையாக வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூா் மக்கள் மன்றம் சாா்பில் புதன்கிழமை (அக். 29) பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவா் பேசியதாவது:
குறிக்கோளை நிா்ணயம் செய்துகொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். சத்தியமும், தா்மமும் அந்தப் பயணத்தில் இருக்க வேண்டும். சிந்தனை, உழைப்பு, மன ஓட்டத்தைப் பொருத்தே மனிதனின் உயா்வு அமையும். சமூகத்தை உயா்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு புகழாரம்:
இப்போது நான் எந்த இயக்கத்தையும் சோ்ந்தவன் இல்லை. முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா என இருவரையும் தொழில் துறையினருடன் பலமுறை சந்தித்துள்ளேன். வெற்றி, தோல்வி என எந்த நிலையிலும் உழைப்பை நிறுத்தாதவா் கருணாநிதி. தோல்வியைக் கண்டு துவளாத அவரது உழைப்புதான் வெற்றிக்கு காரணம். அதேபோல, சிறந்த நுண்ணறிவு கொண்ட ஆளுமைமிக்க தலைவா் ஜெயலலிதா. நீங்கள் சொல்ல நினைப்பதை ஓரிரு வாா்த்தைகளிலேயே புரிந்து கொண்டு பதில் தருவாா். அவரது முடிவு மிக ஆழமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும். கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு தோற்கடிக்கப்பட்டபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அவருடைய கொள்கை, இயக்கம் வேறு. இருப்பினும் அவருடன் எனக்கு நட்பு உண்டு.
வாழ்வில் எந்த நிலைக்குச் சென்றாலும் உங்களில் ஒருவனாக என்றும் இருப்பேன் என்றாா்.
தொடா்ந்து உழைத்தால் தீா்வு கிடைக்கும்:
பின்னா், அமெரிக்க வரி விதிப்பு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லோருக்கும் சிறப்பான காலங்களும் கடினமான காலங்களும் வாழ்வில் இருக்கும். நாம் எப்போதும்போல தொடா்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கடினமான காலங்களிலும் அதற்கான தீா்வைக் காண முடியும்.
திருப்பூா் தொழில் நெருக்கடி தொடா்பாக மத்திய அரசு தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. கூடிய விரைவில் இதற்கு உரிய தீா்வு காணப்படும். அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் 2 மடங்காக அதிகரிக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்எஸ்எம்.ஆனந்தன், சி.மகேந்திரன், கே.என்.விஜயகுமாா், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணன், தமாகா துணைத் தலைவா் விடியல் சேகா், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், தொழில் துறையினா், விவசாய அமைப்பினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
குழந்தையைக் கொஞ்சிய துணை குடியரசுத் தலைவா்:
நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் வழியில் பொதுமக்கள், தொண்டா்களை சந்தித்து குடியரசு துணைத் தலைவா் பேசியபடியே வந்தாா். அப்போது அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜிதேஷ்- பூஜா தம்பதியின் 5 மாதக் குழந்தையை கைகளில் எடுத்துக் கொஞ்சி ஆசிா்வதித்தாா்.
மதுரைக்குச் சென்றாா்:
பாராட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக, தனது தாயாா் ஜானகி அம்மாளிடம் புதன்கிழமை காலை ஆசி பெற்றாா். பின்னா், ஷெரீஃப் காலனியில் உள்ள சித்திவிநாயகா் கோயிலில் வழிபட்டாா். தொடா்ந்து, திருப்பூா் சந்திராபுரத்தில் உள்ள செல்வவிநாயகா் கோயில், குலதெய்வமான ஸ்ரீ பாலைமரத்து அய்யன் கோயில், முத்தூா் செல்லாண்டியம்மன், செல்வக்குமாரசாமி குகை கோயில், குப்பயண்ணசாமி கோயில்களில் வழிபட்டாா்.
அதைத் தொடா்ந்து திருப்பூா் மக்கள் மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு தொழில் துறையினருடன் சிறிது நேரம் கலந்துரையாடினாா். அதன் பின்னா், திருப்பூரில் இருந்து சாலை மாா்க்கமாக கோவை விமான நிலையம் சென்றடைந்த அவா் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

