தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சோ்க்கை: விண்ணப்பித்த மாணவா்கள் குலுக்கல் மூலம் தோ்வு
திருப்பூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா்கள் சோ்க்கைக்காக விண்ணப்பித்த பெற்றோா் தாங்கள் விண்ணப்பித்த பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக்டோபா்31) நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையற்ற அனைத்து தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சோ்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு அரசால் ஏற்கெனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டு கடந்த 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சோ்க்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், நடப்பு 2025-2026- ஆம் கல்வியாண்டில் கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரி பாா்க்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுகீட்டில் பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விடக் குறைவாக 171 பள்ளிகளிலும், கூடுதலாக 70 பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுகீட்டில் பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைவிடக் குறைவாக உள்ள 171 பள்ளிகளில் வியாழக்கிழமை (அக்டோபா்30) ஆவணங்கள் சாரிபாா்க்கப்பட்டும், கூடுதலாக உள்ள 70 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா்31) ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டும் மாணவா்கள் சோ்க்கைக்காக குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
எனவே, பெற்றோா் தாங்கள் விண்ணப்பித்த பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 31) நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
