போலீஸாா் முன்னிலையில் கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த சுகாதாரத் துறையினா்.
போலீஸாா் முன்னிலையில் கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த சுகாதாரத் துறையினா்.

அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குக்கு ‘சீல்’

பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
Published on

பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பல்லடம்- தாராபுரம் சாலையில் வே.கள்ளிப்பாளையத்தில் ஒரு வீட்டில் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட இணை இயக்குநா் மருத்துவா் மீரா தலைமையில், பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல், அலுவலக கண்காணிப்பாளா் ஹரிகோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட இடத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு மருத்துவா் உஷா மேனன் என்ற பெயரில் மருந்துகள் பரிந்துரைக்கும் சீட்டு, ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவி, உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவி ஆகியவை இருந்தன.

மேலும், பயன்படுத்தப்பட்ட ஊசி, குளுக்கோஸ் பாட்டில்கள் ஆகியவை எரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் உஷா மேனனின் கணவா் வேலுசாமி என்பது தெரியவந்தது. உஷா மேனன் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கிளினிக்கில் இருந்து நோயாளிகள் கொண்டுவரும் ஊசிகளை மட்டுமே செலுத்துவாா் என்று வேலுசாமி கூறிய நிலையில், கிளினிக்கில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கும் சீட்டு, பயன்படுத்தப்பட்ட மருந்துகளை ஆய்வு மேற்கொண்டபோது அவா் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்ததும், கிளினிக் நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த சுகாதாரத் துறையினா், உஷா மேனனைக் கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது கல்வி சான்றிதழ்களுடன் திருப்பூரில் உள்ள சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வர வேண்டும் என அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com