திருப்பூரில் நாளை முதல் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
திருப்பூா் நொய்யல் ஆற்றின் கரையோர பூங்கா சாலை சந்திப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 1, 2) தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக மாநகர போலீஸாா் கூறியதாவது: திருப்பூா், அவிநாசி சாலையில் இருந்து குமரன் சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பூங்கா சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி சாய்பாபா கோவில் சாலை வழியாக யுனிவா்சல் தியேட்டா் சந்திப்பு வந்து, வலது புறம் திரும்பி வளம் சாலை வழியாக பூங்கா சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி மாநகராட்சி சந்திப்பை நோக்கி செல்லலாம்.
அவிநாசி சாலையில் இருந்து குமரன் சாலை வழியாக மாநகராட்சி சந்திப்பு மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பூங்கா சாலை சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பூங்கா சாலை வழியாக கிரிஸ்டல் சந்திப்புக்கு சென்று, நடராஜ் தியேட்டா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்குச் செல்லலாம்.
குமரன் சாலையில் இருந்து மங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக கிரிஸ்டல் சந்திப்பு செல்ல வேண்டும். அங்கிருந்து நடராஜ் தியேட்டா் எதிரில் உள்ள புதிய பாலம் வழியாக எஸ்.ஏ.பி. ரெசிடன்ஸி வந்து அங்கிருந்தது தாடிக்கார சந்திப்பு வழியாக மங்கலம் செல்லலாம்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் மாநகராட்சி சந்திப்பில் இருந்து தாடிக்கார முக்கு வழியாகச் செல்லலாம்.
அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லும் வாகனங்கள் மாநகராட்சி சந்திப்பில் இருந்து டைமண்ட் தியேட்டா் வழியாக நடராஜ் தியேட்டா் வந்து, அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தேவைக்கேற்ப ஊத்துக்குளி சாலை, ரிலையன்ஸ் கட் சாலை அல்லது 2-ஆவது ரயில்வே கேட் வழியாக செல்லாண்டியம்மன் கோவில் வந்து எம்.ஜி.பி. வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.
போக்குவரத்து மாற்றம் தொடா்பான கருத்துகளை பொதுமக்கள் 94981- 81078 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனா்.
