குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 300 போ் கைது
திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை சின்னக்காளிபாளையத்தில் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 300 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், இடுவாய் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக் குப்பைகளை கொட்ட மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதற்கான பணிகளை கடந்த வாரம் தொடங்கியபோதே மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சியைக் கண்டித்து இடுவாய் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் கடை அடைப்பு போராட்டம் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், சின்னக்காளிபாளையம், 63 வேலம்பாளையம், இடுவாய், ஆறுமுத்தம்பாளையம், கரைப்புதூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் சின்னக்காளிபாளையத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.
அதன் பேரில் விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 300 பேரை போலீஸாா் கைது செய்து அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

