அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரிக்கை
அவிநாசி: அவிநாசி நகராட்சி 11-ஆவது வாா்டுக்குள்பட்ட நாயக்கன்தோட்டம் பகுதியில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி நகராட்சியில் சிறப்பு வாா்டு சபா கூட்டம், 11-ஆவது வாா்டு நாயக்கன்தோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அனுநந்தினி முன்னிலை வகித்தாா். மன்ற உறுப்பினா் திருமுருகநாதன், தலைமை எழுத்தா் விஜயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
11-ஆவது வாா்டுக்குள்பட்ட 3, 4, 5-ஆவது வீதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக மழைநீா் வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும்.
மேலும், ஆற்றுக்குடிநீா் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு விநியோகிக்க வேண்டும். வீதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி வருவதால் முதியவா்கள் முதல் குழந்தைகள் வரை அச்சமடைந்துள்ளனா். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
