பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடம்
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிா்சாதன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூா் மாவட்டப் பிரிவின் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்க உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளிா்சாதன வசதியுடன் பல்வேறு வகையான உபகரணங்களுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் விளையாட்டு வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

