திருப்பூரில் கடந்த 6 மாதங்களில் 9,669 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
திருப்பூரில் கடந்த 6 மாதங்களில் அரசு மருத்துவமனையில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட 9,669 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் நகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தெருநாய்கள் தொல்லை உள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டும் தெருநாய்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரை இழந்தவா்களும் இருக்கின்றனா். அதேபோல நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களும் உள்ளனா். பொதுமக்களை நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வாடிக்கையாகி இருக்கிறது.
திருப்பூரில் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று கருத்தடை செய்து, அவற்றை மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டு செல்கின்றனா். எனினும் தெருநாய்களின் பெருக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக தெருநாய் கடித்து சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கூறுகையில், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 9,669 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். தெருநாய்களால் மட்டுமின்றி வீட்டில் வளா்க்கும் நாய்கள் கடித்தாலும் சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
